செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

வேண்டும் இதுவே நமக்கு வேண்டும் !!

சொந்தத்தில் இல்லை எனும் சொலை சொல்லாது வேண்டும்!
கொடுப்பதாக இருப்பின் கர்ணனைபோல் கொடுக்க வேண்டும் !

தந்தை சொல் கேட்பதிலே (பரசு)ராமனாய் மாற வேண்டும்!
கெடுதல் செய்பவரையும் வணங்குவதில் ராமனாய் இருக்க வேண்டும்  !

நண்பனின் நலனில் அக்கறைஉள்ள நல்நண்பனாக வேண்டும்!
கனவிலும் பிறர்க்கு நல்லதையே செய்வது போன்று நினைக்க வேண்டும்  !

பிறருக்காக அழுவதிலும் ஒரு சுகம் இருப்பதை உணர வேண்டும்!
கருணை காட்டுவதில் ஒவ்வொருவரும் தாயாய் திகழ வேண்டும்  !

மனிதனை எந்நிலையிலும் மனிதனாக பாவிக்கும் எண்ணம் வேண்டும்!
எவர் ஒருவரையும் கீழ்த்தரமாக நினைக்காத உள்ளம் வேண்டும்  !

ஊரோடு ஒத்து வாழ்வதில் நிலத்தை சேரும் மழைநீர் போல வாழ வேண்டும்!
பச்சோந்தியின் நிலையில்லா நிறம் போன்ற குணம் மாறாதது வேண்டும் !


நண்பனின் செய்கையை எந்த சூழ்நிலையிலும் சந்தேகிக்காதது வேண்டும் !
நம்நலன் பொருட்டு யாரொருவரும் பாதிக்காது பார்த்துகொள்ள வேண்டும்!


நம்முடைய ஒவ்வொரு செயலும் மனிதநேயம் மீறாமலிருக்க வேண்டும் !
நாம் எப்பொழுதும் நம்  மனசாட்சியின் சொல்படி மட்டுமே நடக்க வேண்டும்!


நகைச்சுவை பேச்சு அருகில் உள்ளவரை தீண்டாதவாறு அமைய வேண்டும்!
யாருக்காகவும் நம் நாட்டை விட்டுக்கொடுக்காத தேசப்பற்று வேண்டும் !!


திங்கள், 14 பிப்ரவரி, 2011

மானத்தின் வித்தியாசம் !

மானம் என்பது என்னவோ ஒன்று தான்
அதனுடைய தன்மையோ பாலினத்தை பொருத்து,
நிகழும் இடத்தை பொருத்து, பார்க்கும் 
கண்களை பொருத்து மாறுபடும் என்பதே
அனைவரும் அறிந்த, அறியாத விஷயமாகும்.                  

மிக எளிதாக எல்லோராலும் ஒரே மாதிரியான 
தீர்மானத்திற்கு வரக்கூடிய ஒன்று அதுதான் 
பெண்களின் நடை, உடைகளை வைத்தே
அவர்களின் தன்மையை கூறி விடுவது !

மாறாக ஆண்களுக்கு இது மாதிரியாக 
எளிதில் நடை, உடை, பாவனைகளை  வைத்து 
அவ்வளவு சீக்கிரம் அவர்களின் மான அவமானத்தை
எல்லோராலும் கணித்து கூறி விடமுடியாது !

காரணம் ஆண்களின் உடைகள்  அதிகபட்சம்
குறைந்து  கோவணமாக இருந்தாலும் சரி 
அதனால் அவனுடைய மானம் பறிபோவதில்லை
அதற்கு மாறாக அது உழைக்கும் வர்க்கத்தின்
உச்ச கட்டமான உழைப்பின் உயர்வை 
பிரதிபலிப்பதாகவே அமைந்து மெருகூட்டுகிறது !

ஆணினுடைய ஒவ்வொரு செயலையும் 
பொருத்து தான் அவனுடைய மான அவமானங்கள் 
மற்றவரால் ஒட்டுமொத்தமாக நிர்ணயிக்கப்படுகின்றன !
அவனுடைய மாறாத பேச்சு, எண்ணத்திலும் 
செய்கையிலும் நேர்மை, பிறருக்கு ஊர்(கேடு)
விளைவிக்காத தன்மை இன்னும் எவ்வளவோ 
சொல்லிக்கொண்டே போகலாம்...சுருங்கச்சொன்னால்
 
ஒருவன் நேர்மை தவறி தவறான வழியில் 
பணம் சம்பாதித்து கோடீஸ்வரனாக வாழ்ந்தால் கூட
அவனை இந்த உலகம் மானத்தை விட்டு 
இவ்வளவையும் சம்பாதித்து  என்ன செய்ய 
போகிறான் என்று அவனை தூற்றும் ! 

நேருக்கு நேர் இல்லையென்றாலும் எல்லோராலும் 
மனதுக்குள்ளே அவனை பற்றி அவனை 
பார்க்கும் போதெல்லாம் இது மாதிரியான 
அபிப்ராயமே தோன்றும் என்பதில் ஐயமில்லை !

இந்த மாதிரியான எண்ணம் அவனுக்கே 
தோன்றும் என்பது தான் அதை விட 
வேடிக்கையான அவமானத்துக்குரிய ஒரு 
கேவலமான அற்புதமான மறுக்கமுடியாத உண்மையாகும் !

இப்படி மானத்தை விட்டு பணம் சம்பாரிப்பவர்கள் 
பூமியில் வாழும் போதே இறந்தவர்கள் என
மற்றவர்களால் மனதார போற்றப்பட்டு 
அவர்களை பார்க்கும் போதெல்லாம் 
ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்கள் 
அவர்கள் இப்பூவுலகை விட்டு செல்லும் வரை ...   ....  .....வியாழன், 10 பிப்ரவரி, 2011

வேண்டும், வேண்டா - ஆமைகள்

பிறப்பிலே நல் பிறவாமை  வேண்டா 
பெற்றோரை எந்நிலையிலும் மறக்காமை  வேண்டும்
இளமையில் கல்லாமை இல்லாமை  வேண்டும்
அதிலும் இடைவெளி இல்லாமை  வேண்டும்
படிப்பில் போட்டி வேண்டும் பொறாமை  வேண்டா

பெரியவர் தம் சொல்தனை தட்டாமை  வேண்டும்  
டன் பிறந்தோரை  கவனிக்காமை  வேண்டா
உண்மை நண்பனை தேர்ந்தெடுக்காமை  வேண்டா
கொள்கையில் என்றும் அடிபிறழாமை  வேண்டும்
கடந்து வந்த வாழ்வுதனை மறவாமை  வேண்டும்

அந்தஸ்தில் உயர்ந்தாலும் செருக்கில்லாமை  வேண்டும்
சொல்லில் வாக்கு தவறாமை  வேண்டும்
தவறினால் பூமியில் உயிர் வாழாமை  வேண்டும்
மதியாதார் மனை தனை மிதியாமை  வேண்டும்
பொறுமைக்கும் ஒரு எல்லையை வகுக்காமை  வேண்டா

யார் தடுத்தாலும் கடமையை செய்ய தயங்காமை  வேண்டும் 
பிற(ர்) மாதரை கனவிலும் நினையாமை  வேண்டும்
பணத்தின் மேல் வெறித்தனமான பற்றாமை  வேண்டும்
அதன்(பணம்) பொருட்டு நேர்மை மாறாமை  வேண்டும்
செல்வமிருந்தும் கொடுக்காமை  எனும் பண்பு வேண்டா

 
தற் புகழ்ச்சியை என்றுமே விரும்பாமை  வேண்டும் 
பிற உயிருக்காக சிறிதேனும் கலங்காமை  வேண்டா
சுய நலத்தை மட்டுமே எண்ணாமை  வேண்டும்
யார் சொன்னாலும் புகை பிடித்தல் பிடிக்காமை  வேண்டும்
நாள்தோறும்(விரும்பினால்)  கடவுளை வணங்காமை  வேண்டா

வஞ்சகர்களின் போலியான பேச்சுக்கு மயங்காமை  வேண்டும்
மது பானங்களை எப்போதுமே அருந்தாமை  வேண்டும்
பகைவனுக்கும் கூட நம்பிக்கை துரோகம் செய்யாமை  வேண்டும்
யாரிடமும் மற்றவரை புறங்கூறி திரியாமை  வேண்டும்
நம்மூருக்கு தீர்ப்பை தள்ளிவைக்காத நாட்டாமை  வேண்டும் ..

வியாழன், 3 பிப்ரவரி, 2011

எல்லோருக்கும் எல்லாம் வாய்க்குமா! (?)

பெண்ணுக்கு  பொறுப்பான கணவன்  கிடைக்க வேண்டும்
ஆணுக்கு  குணமுள்ள நல் மனைவி  அமைய வேண்டும்
பெற்றோருக்கு  நல்ல பிள்ளைகள்  வாய்க்க வேண்டும்
பிள்ளைகள்  மேல் என்றுமே அக்கறை உள்ள
வழி காட்டியாய்  தந்தையர்   இருக்க வேண்டும்.
கண்ணால் காணுகின்ற தெய்வமாம்  பெற்ற  தாய்   மட்டுமே
இதிலிருந்து விலகி கடவுளை விட ஒரு படி மேல் சென்று
அனைவருக்கும் உன்னதமாய் அமைந்து விடுகிறா(ள்)ர்.  


மூத்த உடன் பிறந்தோருக்கு  மரியாதையுடன் கூடிய
கீழ்ப்படிபவர்களாக இளையவர்கள்  தங்களை
தானே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்
இளையவர்கள்  முன்னேற்றத்தில்  கண்ணும் கருத்தும்
உள்ளவராய் மூத்த உடன் பிறப்புகள்
தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் !

நண்பர்கள்  என்றால் நன்கு ஆராய்ந்து  நண்பனை
தேர்ந்தெடுத்த பின் வருத்தப்படாமல் தன் 
உயிரை கொடுத்து நண்பனை காப்பாற்றும்
நட்புக்கு  இலக்கணமாக இருக்க வேண்டும் !
இவை அனைத்தும் ஒரு சேர யாருக்கு
வாய்க்கிறதோ அவர்களே கொடுத்து வைத்தவர்கள் ! !

இது தான் இங்கு உள்ள கேள்வியே ?
இவை அனைத்திலும் எதாவது ஒன்றாவது 
குறை உள்ள மனிதன் தான் வாழ்ந்து                
கொண்டு இருக்கின்றான், காரணம்
அவரவர் வந்த வழியோ, அவரவர் செய்த
புண்ணியமோ, பாவமோ! இல்லை
எல்லோரும் சொல்லக்கூடிய விதியோ !

இதனால் தான் கடவுளை கூட சில
சமயங்களில் நம்மில் சிலர் நொந்து
கொள்வதுமுண்டு , நம்மை போல உள்ள
ஆசாமிகளுக்கு வேறு யாரையும்
பழக்கமில்லையே  நொந்து கொள்வதற்கு!
கடவுள் மட்டும் தானே எந்த வித அசைவுமின்றி
அனைத்தையும் கேட்டு கொண்டிருப்பான் !

இப்படியே போகுமா நம் காலம் இல்லை
இப்படித்தான் போகுமா மீதமுள்ள காலமும்
விடையளிப்பார்  யாருமில்லாமல் தொடுக்கிறேன்
கேள்வி கணைகளை,  கேட்க கூட ஒரு
நா(தி)யும்  இல்லை  வருந்தாதீர்கள் 
வார்த்தை தடித்ததற்கு நானும்
மனிதன் தானே எவ்வளவு தான் தாங்குவேன்  !
  
  

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பாசவலை - வாழும் போதே ஒரு சொர்கம்

பாசம் பிரதிபலன் எதிர்பார்க்காதது! 
பாசம் எந்நிலையிலும் மோசம் செய்யாது
அப்படி மோசம் செய்தால் அது 
ஆத்மார்த்தமான பாசமாக இல்லாது 
ஒரு தலை பாசமாக இருந்து 
நாம் ஏமார்ந்ததையே குறிக்கும்.

பாசத்திற்கு ஏமாற்ற தெரியாது
நீரின் பாசம்(பாசி) எப்போதும் வழுக்கும்
மனித பாசம் எப்பொழுதும் வழுக்காது
உன்மீது பாசம் உள்ளவரிடம் நீயும் 
பாசத்தை வைத்துப்  பார் 
இந்த பாரினில் உன்னைவிட
சந்தோசமாக இருப்பவன் யாரும் கிடையாது !

பாசத்தின் உயரிய உன்னதத்தை 
சொல்லில் விவரிக்க முடியாது 
அது ஓர் அற்புதமான உள் உணர்வு !
உடன் பிறந்தோர் ஆணோ, பெண்ணோ 
நமக்கு கிடைத்ததற்கு நாம் 
புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அந்த புண்ணியத்தின் பலனை 
நம்மில் சில பேர் - மன்னிக்கவும் 
பல பேர் அதை பயன்படுத்த 
ம(ற)றுக்கின்றனர் காரணம் 
அச்சடித்த காகிதம்(பணம்) 
மேல் கொண்ட தீராத வெறித்தனமான
மோகம் தான் என்பதில் ஐயமில்லை !

உயிரற்ற,  நிலையில்லா பணத்தின் 
மேல் உள்ள பற்றை ஏன் நம்
இரத்த சொந்தமான உடன் பிறந்தோரிடம் 
வைக்க தயங்குகிறீர்கள். ஒரு நிமிடம் 
யோசித்து பாருங்கள் பணம் மட்டுமே 
வாழ்க்கை ஆகாது, உடன் பிறந்தோரை 
உங்களை விட அதிகமாக நேசியுங்கள்!

இதுவரை எப்படியோ இனியாவது
மனித வாழ்கையை வாழ்ந்து பாருங்கள்!
சொல்லி வருவதில்லை பாசம் 
பிறப்பிலேயே வரவேண்டிய ஒன்று.
பாசவலையில் விழுந்து பாருங்கள் 
வாழும் போதே சொர்கத்தை காண்பீர்கள் !!