சனி, 30 அக்டோபர், 2010

இக்கால முற்றும் துறந்த ஞானிகள் !

முன்னொரு காலத்தில் மனிதனில் ஒரு சிலர், சிறிது  காலம் வாழ்ந்து பின்னர் வாழ்வுதனை வெறுத்து முற்றும் துறந்து மெய் ஞானி என்று தன்னை  (ஏ)மாற்றிக்கொண்டு வாழ்ந்தவர்கள் சிலரும் உண்டு.  தற்கால கணினி உலகத்திலும் சற்றும், கொஞ்சமும், துளியும் அனைவரும் வியக்கதகாத அருவருப்பான வகையில் பல முற்றும் துறந்த ஞானிகளும் வீ (வா)ழ்ந்து   கொண்டுதான் இற(ரு)க்கிறார்கள்.

பணம் ஆம் அதுதான் வாழ்வாதாரம் என எண்ணி அந்த காகிதத்தின் மேல் உள்ள மோகத்தினால் முற்றும் துறந்து விடுகிறார்கள். அவைகள் மா.., ஈ.., வெ..., சூ., சொ...  காரணம் இவைகள் அனைத்தையும் தன் வாழ்க்கையில் அவர்கள் கேள்வி படாத ஒன்றாகும்.  பாவம் அவர்களை அறியாமலேயே து(இ)றக்கிறார்கள்.

பணம், பாசம் இவை இரண்டும் ஒரு பாதையில் செல்வதில்லை.  பணத்தின் வலி வேறு, பாசத்தின் வழி வேறு  அது   ஆல விழுதின்  வேர்(று). பாசத்தை உள்ளத்தளவிலே வைத்திருப்பவர்களுக்குத் தான் அதனுடைய அருமை புரியும்.  ரயிலின் இரு வேறு பாதைகளை போல பணமும் பாசமும் அருகருகே நீண்ட தூரம் சென்றாலும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு எப்படி என்றுமே ஒன்று சேராதோ அதுபோல பணமும் பாசமும் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒன்று சேராது என்பதே சத்தியமான உண்மை.

பணம் என்றால் சாதாரணமாக வேலைக்குசென்று மாத சம்பளமோ, தின கூலியோ, அல்லது தொழில் அதிபர்களோ நேர்மையான முறையில் தனக்கென்ன கிடைக்கிறதோ அதை மட்டும்  பெற்று வாழ்பவர்களை குறிப்பிடவில்லை. பணத்தின் மேல் பற்று, பாசம் என்று யாரை சொல்கிறோம்.  மேற்கண்ட நபர்களின் வருமானத்திற்கும் அப்பால் மேலே சொன்ன  மா.., ஈ.., .....    மற்ற அனைத்தையும் துறந்து அதனை பாவம்
க(இ)ஷ்டப்பட்டு அனைவரிடமும் இ(ரு)ரந்து தன் நிலை இல்லா வாழ்க்கைதனை உயர்த்த பல அடுக்கு மாடிகள் கட்டி. சொகுசு வாகனங்களை வாங்கி இ(ற)ருப்பார்கள்.
இது மாதிரி பணத்தின்மேல் மோகம் கொண்டு வெறித்தனமாக அதனை சேகரிக்கும் மனிதனில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இவர்களுக்கு நீங்களே ஏதாவது ஒரு பெயரை வைத்து கொள்ளுங்கள். தயவுசெய்து விலங்குகளின் பெயர்களை  வைக்காதீர்கள், பாவம் அந்த ஜீவராசிகள்  மனதளவில் வேதனைப்படும்.  மேற்கண்ட பணத்திற்கு ஆளாய் பறக்கும் பிரகஸ்பதிகள் அனைவரும் ஆண்டவன் கையில் உள்ள உயரே பறந்து கொண்டிருக்கும் பட்டங்கள் ஆவார்கள்.  இது போன்ற பட்டத்தை ஆண்டவன் மிக உயரே நாம் அனைவரும் வியந்து பார்கதக்கவகையில் பறக்க விட்டு கொண்டே இருப்பான்.  குறுகிய காலத்திற்கு பிறகு ஆண்டவன் சற்றே பட்டத்தை சுண்டி (இழுத்து) விடுவான்.  அப்போது பட்டம் தலைகீழாக    கீழ் நோக்கி வந்து பிறகு மேல் எழும்பும்.  அப்போது பட்டத்தை அதாவது அந்த பிரகஸ்பதியை நம்பி வாழும் அனைவரும் என்ன ஆவார்கள் என்பதை நாமும் சரி மேற்கண்ட பட்டமும் சரி எண்ணி பார்க்கவே முடியாது

யாருக்காக அந்த பட்டம் உயர உயர பறந்ததோ அவை அனைத்தையும் இழந்து பின்னர் தனிமரமாக  பறக்க வேண்டிய நிலை ஏற்படும்.    ஆண்டவனின் கணக்கை யாரால் புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் என்னவோ அவன்  பட்டத்தை விடாமல் இறுக்கி பிடித்து கொள்வான்.  ஆனால் அந்த பட்டமே ஒரு சில நாட்களில் ஆண்டவன்  கையில் இருந்து விடுபட்டு தானாகவே தன்னை அழித்துக்கொள்ளும்.  பணத்தின் பயனால் அதிகபட்சம் என்ன முடியும் என்பதை நம்மால் ஒரிரு  வார்த்தைகளில்  கூறிவிட  முடியும்.

ஒன்று - வெயில் காலத்தில் குளிர் சாதனம்
                  குளிர் காலத்தில் வெப்ப சாதனம்
 இரண்டு - உயர பறக்க ராக்கெட்
                    கடலுக்கு அடியில் செல்ல நீர் மூழ்கி கப்பல்
மூன்று  - பல விதமான சத்தான உணவுகள் - அதுவும்
                   சர்க்கரை  வியாதி இல்லாமல் இருந்தால் தான்!
                    இருந்துவிட்டால் பிறகு என்ன கஞ்சி காய்ச்சி விடுவார்கள் !
                    பயப்படவேண்டாம்  உங்களை அல்ல நீங்கள் சாப்பிடுவதற்கு .
                    

இவை அன்றி வேறதும் இவர்கள் கண்டிலர்.  இது போன்ற பிரகஸ்பதிகள் மண்ணில் வாழ்ந்து கொண்டு இருப்பதாக எண்ணி வாழும் போதே இறந்து கொண்டு இருப்பவர்கள்.  இவர்களுக்காக நாம் ஆழ்ந்த பரிதாபமெனும் அஞ்சலியை செலுத்துவோம்  அவர்கள்  இப்பூமியிலே வீ (வா)ழும்  போதே.