நட்டு வச்ச செடியினிலே
பூத்த பூவும் காணலியே
பரிச்ச அந்த பூவையும்
தலையில வைக்க முடியலயே..
தலையில் முடி முளைக்கும்
முன்பே பூவச்சு அழகு
பாத்தா என பெத்த ஆத்தா...
பாதியிலே வந்ததல்ல பூவுக்கும்
எனக்குமுள்ள அந்த பந்தம்
ஆதியிலே நாவச்ச பூதானே...
திருமணம் என்ற சடங்காலே
எனை வந்து சேர்ந்தவனோ
விதி முடிந்து பாதியிலே
என்னை விட்டு போனதாலே...
பொறந்ததுல இருந்து வச்ச
பூவை வைக்க இங்கு
தடையும் சொல்லும் மனித
உருவில் மிருகங்களும் உண்டு...
எந்த ஊர் நியாயமென்றே
யாருக்கும் இங்கே தெரியல
தடை போட வருவாங்க
இங்கு தாராளமாய் நம்மவங்க
நியாயம் கேட்கத்தான் வாரதில்ல...
===================================================
நியாயமான வார்த்தைகள் உணருவார் யாரோ ?
பதிலளிநீக்குபூ வைப்பதில் பூவையர்களே
பதிலளிநீக்குபூவையர்களுக்கு எதிரியாக இல்லாமல்
இருந்தாலே போதும் என்ற நிலை தான் அதிகம் உள்ளது...
நன்றி சசி கலா...
மிக அருமையான சிந்திக்கவைத்த கவிதை வரிகள்...
பதிலளிநீக்குபெண்களுக்கே உரிய சாபம் தானோ என்ற வேதனை வரிகள்....
பூவும் பொட்டும் பிறந்ததில் இருந்தே வைத்துக்கொள்ளும் பெண்களை.... இடையில் திருமணம் என்ற பெயரில் மங்கலநாண் பூட்டி இல்லறவாழ்வில் நுழைந்தப்பின்னர்.... கணவன் இல்லாது போனால் மனைவியை அலங்கோலம் செய்ய காத்திருக்கும் சமூகம்... சிட்டியில் இதுபோன்ற சம்பவங்கள் குறைவு... ஆனால் கிராமப்புறங்களில் இதுபோன்று இன்றும் நடக்கிறது என்பதே உண்மை....
தலை மழித்து, வளையல்களை உடைத்து, பொட்டழித்து பூவை அகற்றி அமங்கலியாய் இருப்பவளை இன்னும் வெறுமையாக்கி வேடிக்கைப்பார்க்கும் சமூகம்....
கண்ணீர் வரிகளாக காணமுடிகிறது கவிதை வரிகள்....
ஏன் பொட்டும் பூவும் நான் வைக்கக்கூடாது என்று எதிர்க்கேள்வி எழுப்பினால் எரியும் சிதையில் தள்ளி கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தினாலோ என்னவோ பெண்களின் மௌனம் மட்டும் இன்னும் தொடர்கதையாக.....
அருமையான கவிதைப்பகிர்வு சகோ... அன்புவாழ்த்துகள்.
உண்மைதான் சகோதரி மஞ்சுபாஷினி..
பதிலளிநீக்குதாங்கள் சொல்வது போல பெண்கள் இன்னும் வாயடைத்து பேசா மடந்தையாகத்தான் இருக்கிறார்கள்... சமுதாயத்திற்கு ஒருவகையில் பயந்து கூட என்று சொல்லலாம்..
நன்றி உங்களின் ஆழ்ந்த எல்லோரையும் சிந்திக்க வைக்க கூடிய கருத்திற்கு... மாறவேண்டும் இந்த நிலை. அப்போது தான் நாடு உண்மையிலேயே முன்னேற்றம் அடைந்ததாக ஏற்றுக்கொள்ளமுடியும்... மீண்டுமொருமுறை தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ...